தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த மண்டபம் 1971-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்டோருக்கு நினைவிடங்கள், சிலைகள் அமைப்பது, பராமரிப்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தியாகி வள்ளியம்மை மண்டபத்தை ரூ.89.54 லட்சம் செலவில் புதுப்பிக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும்.
வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் ஆண்டு தோறும் அரசு விழா நடத்துவது குறித்து ஏற்கனவே உள்ள முன்னுதாரணத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் அமைக்கும் கோரிக்கை குறித்தும், சீர்காழியில் தமிழிசை விழாவை சிறப்பான வகையில் நடத்த வேண்டும் என்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்.
அருணாசலக்கவிராயருக்கு தில்லையாடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஊர் மக்களின் கோரிக்கை குறித்து கேட்டதற்கு, மணி மண்டபங்கள் அமைப்பதை தவிர்த்து, மக்கள் பயன்படுத்தும் வகையில், சுப நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலும் அரங்கங்களாக அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின் முடிவாக இருக்கிறது. சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் உள்ளது. இருந்தாலும் அருணாசலக்கவிராயர் பிறந்த ஊரான தில்லையாடியில் அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
முன்னதாக தியாகி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, வருவாய் கோட்டாட்சியர்கள் உ.அர்ச்சனா, வ.யுரேகா, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், தில்லையாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ரெங்கராஜ், தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல் இசை நாடக மன்ற நிறுவனர் என்.வீராசாமி, கிராம பொதுநலச் சங்க முன்னாள் தலைவர் சா.ஜெகதீசன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் மற்றும் அதிகாரிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.