BREAKING NEWS

தூத்துக்குடி கடலில் ரூ.700 கோடியில் காற்றாலை : வஉசி துறைமுக ஆணையம் திட்டம்!

தூத்துக்குடி கடலில் ரூ.700 கோடியில் காற்றாலை : வஉசி துறைமுக ஆணையம் திட்டம்!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் மூலமாக ரூ.700 கோடி மதிப்பில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “வஉசி துறைமுகத்தில் முடிந்த நிதி ஆண்டில் 38.04 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு 256.14 கோடி ரூபாய் நிகர உபரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 87 சதவீதம் வளர்ச்சி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.தூத்துக்குடி துறைமுகத்தில் 7ஆயிரத்து55 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவதற்காக பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

துறைமுகத்தில் 455 கோடி ரூபாய் மதிப்பில் 9 ஆவது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது சரக்கு பெட்டக போக்குவரத்து பணிகள் தொடங்கும்.  மூன்றாவது வடக்கு சரக்கு தளம் 265 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் அனைத்து சரக்குகளையும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காகதூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூரில் 300 ஏக்கரில் பல் முனை சரக்கு போக்குவரத்து திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்தை ஹைட்ரஜன் முனையமாக மாற்றுவதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்ததிட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டு  இரண்டு ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகம் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா, பசுமை ஏத்தனால் துறைமுகமாக உருவாகும்.

தற்போது துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் நுழைவாயிலை 153 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்து பணி நடைபெற்று வருகிறது. தற்போது 26 கோடி ரூபாய் செலவில் இரண்டு காற்றாலை மின் திட்டம், 16 கோடி ரூபாய் செலவில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் அதன் பின் இத்துறைமுகம் பசுமை துறைமுகமாக உருவாகும்.

துறைமுகத்தில் மேலும் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக துறைமுகம் தயாராக உள்ளது.

 

தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக நடுக்கடலில் 2000 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி அமைக்கும் திட்டங்கள் 700 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது இதற்காக டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இன்னும் ஒரு ஆண்டில் இந்த திட்டம் செயல்படுத்த தொடங்கப்படும் என்று கூறினார்.

பேட்டியின் போது  தூத்துக்குடி துறைமுகம் போக்குவரத்து மேலாளர் பிரபாகர், துறைமுக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர் சாகு, துணை மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரி, மக்கள் தொடர்பு அதிகாரி சசிகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS