தேனி அல்லிநகரம் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள். புகை மண்டலமாக காட்சி அளிக்கும் அப்பகுதி.
தேனி அல்லிநகரம் நகராட்சி குப்பை கிடங்கு வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தப்புக்குண்டு சாலையில் உள்ளது. 27 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த குப்பை கிடங்கில் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினால் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. 15 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குப்பை கிடங்கில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் உள்ளது.
டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடக்கும் இக்கிடங்கில் இன்று பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றிய சில நிமிடங்களிலே தீ மள மளவென குப்பைகளில் பரவிவருகிறது இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தேனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குப்பை கிடங்கு அருகே இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகள் யாரும் இல்லை, தீயை இன்று இரவுக்குள் அணைக்காமல் நாளையும் குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிந்து வந்தால் அருகில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் இக்குப்பை கிடங்கை முறையாக பராமரிப்பு செய்யாததால் குப்பைகளில் தொடர்ந்து தீ பரவி வருவதாகவும்,. குப்பை கிடங்குகள் அருகாமையில் தீயணைப்பதற்கு ஏதுவாக தண்ணீர் வசதியும் இல்லாததால் தீயை அணைப்பதற்கு கால தாமதம் ஆகும் என தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.