பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு ரூ. 20, ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகேயுள்ள சாலை அகரம் கண்ணப்பன் நகரில் விக்கிரவாண்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் அருள் பிரதா ஆவார். இவர் சமீபத்தில் வீட்டு மனை ஒன்று வாங்கியுள்ளார்.
அந்த வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்ய அண்ணாமலை, சாலை அகரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் விஏஓ சதிஷ் என்பவரை அனைத்து ஆவணங்களையும் கொண்டு அணுகியுள்ளார்.
அப்போது பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த அண்ணாமலை இதுகுறித்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அண்ணாமலை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பாளர் சத்யராஜிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகார்தாரரான அண்ணாமலையிடம் ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பட்டா மாற்றுதலுக்கு லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரி சதீஷிடம் கொண்டு சென்று கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர். அவரை பின்தொடர்ந்து சென்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், அண்ணாமலையின் பட்டா மாறுதல் செய்ய சாலை அகரம் பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்து கிராம நிர்வாக அதிகாரி சதீஷிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது அதனைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அதிகாரி சதீஷை, அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சதீஷின் கைரேகை பதிந்த லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்து பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.