பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண்பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து லாரியில் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்றுள்ளார்.
அப்போது லாரி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் சென்ற போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சந்தோஷ் திருப்பத்தூர் நகரப் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற காரணத்தினால் இரவு 8 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று கூறி வாகனத்தை பின்னோக்கி எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால், பணியில் இருந்த காவலர் சந்தோஷ் என்பவருக்கும் ஓட்டுனர் அருண் பாபுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், ஓட்டுநர் அருண் பாபு திடீரென காவலர் சந்தோஷை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் காவலரின் சட்டையை கிழித்து கல்லை எடுத்து காவலர் சந்தோஷ் மீது தாக்க முயன்றுள்ளார். இதனைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் ஓட்டுனர் அருண்பாபுவை பிடித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி நிலவழகன் தலைமையிலான போலீசார் ஓட்டுநர் அருண்பாபுவை வாணியம்பாடி கிராமிய போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அருண்பாபு மது போதையில் காவலர் சந்தோஷை தாக்கியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் அருண் பாபு மீது 5 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார் காவலரை தாக்கிய ஓட்டுனர் அருண்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.