பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்! பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம், அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை..
அணைக்கட்டு,
பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவில் பள்ளிகொண்டா பேரூராட்சி உள்ளது ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் மற்றும் செயல் அலுவலர் எஸ். உமாராணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார் அதில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கல்வெட்டுகள் அமைத்தல் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது என 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 18 வார்டு பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பேரணி பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படும் தை பொங்கல் திருநாளின் முதல் நாள் போகிப்பண்டிகையை கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் புதியன புகுதலும் பழைய என கழிதலும் எனக் கூறி வீட்டில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே அன்று ஒரு நாளில் காற்றின் மாசு அதிகரிக்கிறது.
மேலும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதினால் பொதுமக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள் என தெரிவித்து அரசின் மூலம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகிப்பண்டிகையாக கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியானது பேரூராட்சி தலைவர் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. முன்னதாக செயல்அலுவலர் உமாராணி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மக்கள் தேவையற்ற துணிகள், டயர்கள், பழைய புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுகிறது. எனவே தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் எரிக்கக்கூடாது என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தேவையற்ற பொருட்களை எக்காரணம் கொண்டும் எரிக்காமல் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வலியுறுத்தும் வகையிலும், புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணி நடைபெற்றது.
மேலும் பேரணியில் பேரூராட்சி துணைத்தலைவர் வசிம் அக்ரம், சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், அலுவலக பணியாளர்கள் சந்தோஷ், கமலநாதன், அரவிந்த் மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என பல தரப்பினர் பங்கேற்று இருந்தனர்.