பாபநாசத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து தனித்து போட்டியிட போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட100 கோடி நிலுவை தொகை வழங்க வலியுறுத்தியும், ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் பெற்ற 300 கோடி ரூபாய் கடனை ஆலை நிர்வாகமே செலுத்த வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் திமுக அரசை எதிர்த்து தனித்து போட்டியிட போவதாக கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்தனர்.
மேலும் போராட்டத்தின் 150-வது நாளான இன்று கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு கேட்டு இந்திய ஜனநாயக கட்சி மாநில போராட்ட குழு தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விழுப்புரம் வேல்மாறன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இப் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.