BREAKING NEWS

பாரதிய ஜனதா கட்சியில் சசிகலா இணைந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் சசிகலா இணைந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்  தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற நிலையில் அதிமுக இரண்டாக பிளவு பட்டது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார். இதனையடுத்து சில தினங்களில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ்- இபிஎஸ் அணி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இணைந்ததையடுத்து சசிகலா அதிமுகவில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூடி பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்து தீர்மானமும் நிறைவேற்றினர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது சசிகலாவிற்கு பின்னடைவாக அமைந்தது. மேலும் சசிகலா அரசியல் நிலைப்பாட்டை எடுக்காமல் ஆன்மிக பயணம் செய்து வருகிறார். அவ்வப்போது அதிமுகவில் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பேன் என கூறிவருகிறார். இதனை அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் அதற்கான முயற்சியை நாங்கள் எடுப்போம் என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை என்று திமுக கூறியது, ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது. இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது தயாராகவில்லை, பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதாக குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாக கருதுகின்றனர். திமுக தங்களை பெருமை படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறார்கள் தவிர மக்கள் பிரச்சினையை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை என விமர்சித்தார். சசிகலா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால், பாஜகவில் சசிகலா சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் என கூறினார். இதற்கான முயற்சிகளை பாஜக எடுக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )