போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிபாண்டி. பார்வதி தாய். இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகள், தங்கத்துரை, செல்வகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இதில் தங்கத்துரை இறந்துவிட்டார்.
இந்தந்தையின் சொத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்காக விஜயலட்சுமி பெயரில் வாரிசு சான்று வேண்டுமென்று திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை சேர்ந்த நபர் ஒருவரை அணுகினாராம்.
அவர் ரூ.2000 பெற்றுக் கொண்டு விஜயலட்சுமியிடம் போலியாக வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். அந்த வாரிசு சான்றிதழில் சகோதரர்கள் பெயர்கள் இல்லை. விஜயலட்சுமி பெயரும், அவரது தாய் பெயர் மட்டுமே உள்ளது. அந்த சான்றிதழ் மூலம் தந்தையின் சொத்தை விற்பதற்காக விஜயலெட்சுமி கடந்த மாதம் கயத்தாறு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு வாரிசு சான்றிதழை சரிபார்த்த சார்பதிவாளர் அலுவலகத்தினர் சந்தேகம் அடைந்து, வாரிசு சான்றிதழ் குறித்து உண்மை தன்மை சான்று வாங்கி வருமாறு விஜயலட்சுமியிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி இன்று சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று உண்மை தன்மை சான்று கேட்டு மனு அளித்தார்.
விஜயலட்சுமி அளித்த வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் பாபு ஆய்வு செய்தபோது அது போலியான வாரிசு சான்று எனத் தெரியவந்தது. இதன் பின்னர் அவர் விஜயலெட்சுமியை கையும் களவுமாக பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்தை விற்பதற்காக பெண் ஒருவர் போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் போலியான வாரிசு சான்று தயாரித்துக் கொடுத்த திருநெல்வேலியைச் சேர்ந்த மோசடி நபரை பிடித்தால் இது போன்ற எத்தனை சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்து மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.