முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட நல்லுக்குறிச்சி மற்றும் மேலக்கொடுமலூர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டப்பணிகளை இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. பாஸ்கரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார்.
நல்லுக்குறிச்சி கிராமத்தில் 7.50 ஏக்கர் பரப்பில்
உளுந்து பயிரில் அமைக்கப்பட்டிருக்கும் விதைப்பண்ணையை ஆய்வு செய்து பூக்கும் தருணத்தில் டி.ஏ.பி. 2 சத கரைசலை இலை வழி ஊட்டம் தர வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் உளுந்து பயிரில் வரிசை விதைப்பு கருவி கொண்டு விதைப்பு செய்யப்பட்டுள்ள செயல் விளக்கத் திடல்களை ஆய்வு செய்தார்.
பின்னர், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிச் சாகுபடிக்கு கொண்டு வரும் இனத்தின் கீழ் 10 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலச் சீர்திருத்தப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு. கேசவராமன், வேளாண்மை அலுவலர் திருமதி. தமிழ் அகராதி மற்றும் உதவி விதை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.