ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம் கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் 10 தற்காலிக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நித்யா மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் குடியாத்தம் ஆய்வாளர் பாரி, வள்ளிமலை கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
13 லட்சத்து 44 ஆயிரத்து 391 ரூபாய் மற்றும் 28.5 கிராம் தங்கம், 151 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.