வாணியம்பாடி நூலகத்தில் 55 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஹரியானாவில் நடைபெற்ற தேசிய வளையப்பந்து போட்டியில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வாணியம்பாடி வளையாம்பட்டு சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நல்நூலகர் மணிமாலா வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கிவைத்தார். வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும் பொழுது நூலகத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நூலகங்களில் புத்தகத்தை தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது, நமக்கு நூலகங்கள் மூலம் தான் பல அனுபவம் கிடைக்கிறது போட்டி தேர்வுகளுக்கு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் குரூப் 2 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மெயின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழி வகைகளையும் மற்றும் அனைத்து வகை தேர்வுகளையும் எப்படி எதிர்கொள்வது என்றும் தன் அனுபவத்தின் மூலம் கிடைத்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் பேசிய ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அவர்கள் நூலகத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்வதற்கு தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சமூக ஆர்வலர் நரிநயீம் பேசும் போது நூலகத்தின் பெரிய கட்டிடம் சிதிலமடைந்து இருக்கிறது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டினால் போட்டித்தேர்வு வகுப்புகள் நடத்த உதவியாக இருக்கும். 50 வருடங்களாக இந்த நூலகத்தின் மூலம் மட்டுமே தமிழையும் பொது அறிவையும் வளர்ப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் வடிவேல் சுப்பிரமணியன், ரோட்டரி ஆளுநர் சக்கரவர்த்தி, நல்லாசிரியர் ரவிச்சந்திரன், யோகா ஆசிரியர் வெங்கடாசலம், தமிழாசிரியர்கள் அன்பரசு, கோட்டீஸ்வரன், எழுத்தாளர் சுகந்தி மகாலிங்கம், நூலகப்பணியாளர் காயத்ரி உள்ளிட்டார் பங்குபெற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
பள்ளி மாணவ மாணவியர், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் நல்நூலகர் விஜயகுமார் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.