BREAKING NEWS

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குறுவை சாகுபடி தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும்.குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கல்லணை திறப்பு இதனால் சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக முன்கூட்டியே அதுவும் மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி காலை திறந்து வைத்தார்.மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை கல்லணையை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக நேற்று மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் குறுவை பருவத்தில் தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 150 ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 93 ஆயிரத்து 860 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 760 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 86 ஆயிரத்து 450 ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 700 ஏக்கரும், அரியலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 470 ஏக்கரும் என மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 390 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பொத்தானை அழுத்தி கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு நவதானியங்கள், மலர்களை தூவினர்.

கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி வீதமும், கல்லணைக்கால்வாயில் 100 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விழாவில் கலெக்டர்கள் சிவராசு(திருச்சி), லலிதா(மயிலாடுதுறை), எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்(திருவையாறு), ஜவாஹிருல்லா (பாபநாசம்),மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )