வெகு சிறப்பாகச் செயல்பட்ட காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொதுமக்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள நகை மற்றும் அடகு கடையில் கடந்த 24ஆம் தேதி சுவற்றில் துளை இட்டு ரூ.75 லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் 2 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையிலான தனிப்படை போலீசார் இரவு , பகல் பாராமல் அயராது உழைத்து கள்ளக்குறிச்சி பகுதியில் முகாமிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவர் குற்றவாளிகள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
காட்பாடி டிஎஸ்பி பழனி, காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர்கள் ஆதர்ஷ், ராமமூர்த்தி ஆகியோர் திறம்படச் செயல்பட்டு துரிதமாக குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இவர்களின் இத்தகைய பெருமைமிகு செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
