முதலமைச்சரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி தாக்கியதில் காயமடைந்த செய்தியாளரை நேரில் சந்தித்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய வைத்த திமுகவினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் திரு ராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினை படம் எடுக்க விடாமல் அவரது தனிப் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். மீறி படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் சம்பவத்தில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு கால் மற்றும் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விஷயம் பெரிதாவதை உணர்ந்த திமுகவினர் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சீர்காழி திமுக ஒன்றியக்குழு தலைவி கமலஜோதியின் கணவர் முத்து தேவேந்திரன் மற்றும் சீர்காழி நகர செயலாளர் சுப்புராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் ஆரிஸ் ஜமாலுதீனை நேரில் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை தாக்கிய காவல்துறை அதிகாரியை அந்தப் பணியில் இருந்து நீக்கம் செய்து வேறு பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
