’’எனது குப்பை எனது பொறுப்பு” இன்று முதல்வர் தொடங்கி வைப்பு!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்க மக்கள் இயக்கத்தினை இன்று தொடங்கி வைக்கிறார்.கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக தூய்மை பணியாளர்களுக்கு வேலை பளு அதிகமாகிறது. மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே பொது மக்கள் கண்ட இடங்களில் குப்பையை கொட்ட வேண்டாம் என்றும், மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து போட வேண்டும். மேலும் இது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு பேருதவியாக இருக்கும். குப்பைகள் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மாநகராட்சி சார்பில் அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் உள்ள பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தூய்மைப் பணி தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் நடக்கும் தூய்மைப்பணியைக் காட்டிலும் இந்த தீவிர தூய்மைப் பணியால் நகரின் அனைத்து பகுதிகளும் இனி தூய்மையாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தாங்களாகவே சொந்த பொறுப்பில் தாங்கள் வசிக்கும் இடங்களையும், தாங்கள் அடிக்கடி கூடும் பொது இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்தால் இந்த திட்டம் மேலும் சிறப்பாக செயல்படும் என்பது பொது ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
