தெருக்கூத்து கலைஞரின் குடில் வீட்டை காலி செய்ய அதிகாரிகள் மிரட்டி வருவதால் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படத்திடம் கண்ணீர் விட்டு கதறி அந்த நாடக கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் இவர் மதுபோதைக்கு எதிரான சுகாதாரம் உள்ளிட்ட மத்திய அரசின் விழிப்புணர்வு நாடகங்களில் நடித்து அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார் பிறந்ததிலிருந்து நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடில் வீடு கட்டி வாழ்ந்துவரும் இவர் பட்டா கேட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்த நிலையில் இவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என கிராம நிர்வாக அதிகாரி பரிந்துரை செய்த நிலையில் தஞ்சை வட்டாட்சியர் பட்டா வழங்க மறுப்பதோடு இடத்தை காலி செய்ய கோரி காவல்துறையை வைத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.


அதே பகுதியில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு பட்டா வழங்கிய நிலையில் தெருக்கூத்து கலைஞரை தெருவில் துரத்திவிடும் நிலை உள்ளது எனவும் தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு தங்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டுமென தனது வீட்டில் மாட்டி வைத்துள்ள முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி கோரிக்கை விடுத்துள்ளார் தங்கள் வீட்டை காலி செய்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை எனவும் முதல்வர் படத்தை பார்த்து வேதனை தெரிவித்துள்ளார்.
