தன்னிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு தன்னை கவனிப்பதில்லை என்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தன் மகன் மற்றும் மகள், மருமகன் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர். அந்த வகையில் தஞ்சாவூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான வேதாசலம் என்பவர் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நான் மருத்துவத் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர் இதில் எனது முதல் இரண்டு மகன்களும் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மற்றும் எனது கடைசி மகள் ஆகியோரால் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை.

ஆனால் எனது மூன்றாவது மகன் மகேஷ்குமார் மற்றும் மூத்த மகள் கிருத்திகா தேவி ஆகியோர் என் மீது அதிக அக்கறை இருப்பது போல் நடித்து எனது சொத்துக்களை என்னிடம் இருந்து எழுதி வாங்கி விட்டனர். என்னை நல்ல முறையில் பாதுகாப்பதாக உறுதி கூறியதால் நானும் அவர்களின் பேச்சை நம்பி சொத்துக்களை எழுதிக் கொடுத்து விட்டேன். இவை அனைத்தும் எனது சுய சம்பாத்தியத்தில் சேர்க்கப்பட்டது. இவற்றை இனாம் செட்டில்மென்ட் மூலம் எழுதிக் கொடுத்தேன்.
இந்நிலையில் இந்த சொத்துக்களின் மீது நான் பெற்ற கடன் தொகையை திரும்ப கொடுத்து விட வேண்டும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சொத்துக்களை எழுதி கொடுத்தேன். எனது மகன் மகேஷ் குமார், நான் பெற்ற கடனை திரும்ப கொடுத்து விடுவேன் எனக் கூறிவிட்டு எனக்கு தெரியாமல் அதிமுகவை சேர்ந்த தஞ்சாவூர் முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கு சொத்துக்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதே போல் எனது மூத்த மகள் கிருத்திகா தேவியும் என்னிடமிருந்து சொத்துக்களை பெற்றுக் கொண்டு என்னை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இது குறித்து கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எனது சொத்துக்களை எனது மூன்றாவது மகன் மகேஷ் குமார் மற்றும் மூத்த மகள் கிருத்திகா தேவி ஆகியோரிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன், மகள், மருமகன் ஸ்ரீதர் பாபு மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
