தவில், நாதஸ்வர வித்வான்கள்,இசைக் கலைஞர்களுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், விருது வழங்க வேண்டுகோள்.
தஞ்சாவூரில் பிரபல தவில் வித்வான் டி.ஆர். கோவிந்தராஜன் (70) இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருது கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தஞ்சாவூரில் தவில், நாதஸ்வர வித்வான்கள், இசைக் கலைஞர்கள் என ஒன்று சேர்ந்து டி.ஆர்.கோவிந்தராஜன் அவர்களுக்கு மலர் மகுடம் சூட்டி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தவில் வித்வான் டி.ஆர் கோவிந்தராஜன் கூறும்போது,சிறு வயதில் குருகுல வாச முறைப்படி தவில் இசை கற்றுக்கொண்டு, பழம்பெரும் தமிழ் வித்வான்களுடன் இணைந்தும் தனியாகவும் 60 ஆண்டுகளாக பல்வேறு இசை கச்சேரிகள் நடத்தி உள்ளதாகவும், திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் விரிவுரையாளராக 24 ஆண்டுகள் பணியாற்றியதாகவும்,
தமிழக அரசின் கலைமாமணி விருது 1982- 83 ஆண்டுகளில் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார், மேலும் தான் பெற்ற மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதினை தனது குருவான நாச்சியார் கோவில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை உள்ளிட்ட தவில் இசை வித்வான்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். மேலும் நாதஸ்வரம், தவில் என்பது மங்கள இசை ஆகும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இருக்கிறது, இறைவனுக்காக தோற்றுவிக்கப்பட்டதே இந்த மங்கள இசை, கோவிலில் பூஜை செய்வதற்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே மங்கல இசை இசைக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் தான் அதிகம் பேர் உள்ளனர், தவில், நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் பத்மஸ்ரீ விருது மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த இசைக் கலைஞர்கள், வித்வான்கள் மற்றும் இளம் தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் ஏராளமானோர் என இந்த துறையில் உள்ளனர்,ஆகவே அவர்களை தேர்ந்தெடுத்து பத்மபூஷன், பத்ம விபூஷன்,ஆகிய விருதுகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று இசைக் கலைஞர்கள் சார்பில் வேண்டுகோள் வைத்துள்ளார்.