BREAKING NEWS

ஒப்பந்ததாரரின் தரமற்ற பணியால் விபரீதம் – தேவாலய கட்டுமானப் பணியில் கூரை சரிந்து பெரும் விபத்து: சுமார் 12 பேர் படுகாயம்! 

ஒப்பந்ததாரரின் தரமற்ற பணியால் விபரீதம் – தேவாலய கட்டுமானப் பணியில் கூரை சரிந்து பெரும் விபத்து: சுமார் 12 பேர் படுகாயம்! 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மண்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் சிஎஸ்ஐ தேவாலயத்தின் மேல் தளம் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், ஆந்திர மாநில மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மற்றும் சித்தூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இதனிடையே, கட்டுமானப் பணிக்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டனவா? பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களின் தரம் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா? ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கு உரிய தகுதி உள்ளதா? பணியை கண்காணித்த பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்தார்களா? என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்டுமானப் பணியில் விதிமீறல், தரக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதன் உண்மையான எண்ணிக்கையையும், காயமடைந்தவர்களின் முழுமையான விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை, நிவாரணம் மற்றும் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் கட்டுமானத் தரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS