திருக்குடை சமர்ப்பண யாத்திரை: அமைச்சர், எம்.எல்.ஏ., ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பிதழ் வழங்கல்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை கமிட்டி சார்பில் நடைபெற உள்ள 4ம் ஆண்டு திருக்குடை சமர்ப்பண யாத்திரையில் பங்கேற்குமாறு வேலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் விஜய் பாலாஜி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் மற்றும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, குடியாத்தம் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் இருந்து திருக்குடை சமர்ப்பண யாத்திரை தொடங்குகிறது.
திருக்குடை உற்சவர் மற்றும் ஸ்ரீ பெருமாள் பாதம் முன்னிலையில் நடைபெறும் இந்த யாத்திரை, குடியாத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பிச்சனூர்பேட்டை ஸ்ரீ பெருமாள் திருக்கோயிலை சென்றடைகிறது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

யாத்திரையை சிறப்பிக்கும் வகையில் கோலாட்டம், பண்டரி பஜனை, நாதஸ்வரம், மிருதங்கம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதன் ஒரு பகுதியாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் எஸ். சௌந்தரராஜன், தொழிலதிபர் கே.வி. கோபாலகிருஷ்ணன், குடியாத்தம் நகர பாஜக தலைவர் எம்.கே. ஜெகன், குடியாத்தம் கணபதி கைத்தறி நெசவாளர் சங்க முன்னாள் தலைவர் குமுதா கோபி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் விஜய் பாலாஜி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் மற்றும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து திருக்குடை சமர்ப்பண யாத்திரைக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
ஆன்மிக நிகழ்வாக மட்டுமின்றி, குடியாத்தம் நகரின் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் இந்த யாத்திரையில் அரசியல், தொழில், சமூக மற்றும் பொதுநலத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அகில பாரத மக்கள் சக்தி இயக்க நிறுவனர் ம.சி. கார்த்திக் ஜி, மாநிலத் தலைவர் இராம. சரவணன், ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் யாத்திரைக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மிகம், பக்தி, பாரம்பரிய கலை மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஒருங்கிணைக்கும் இந்த நான்காம் ஆண்டு திருக்குடை சமர்ப்பண யாத்திரையில் குடியாத்தம் நகரின் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும் என விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
