காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தில் வகுப்பறை இல்லாமல் மாணவ, மாணவிகள் பரிதவிப்பு

வகுப்பறை இன்றி வராண்டாவில் கல்வி கற்கும் மாணவர்கள்
பாடரீதியாக திறன் மேம்படுத்தும் ஆய்வகங்களும் இல்லை
தரம் உயர்த்தியும் உட்கட்டமைப்பில் மேம்படாத அரசுப்பள்ளி அவலம்
இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக பெற்றோர்கள் வேதனை
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்குகிறது.
இங்கு 6 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 650 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்பறைகள் இன்றியும், கணினி மற்றும் அறிவியல் ரீதியாக திறனை மேம்படுத்துவதற்கான ஆய்வகங்களும் இல்லாத அவலம்தான் நீடிக்கிறது.
மேலும், போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு வராண்டாவில் ஜன்னலில் போர்டு பொருத்தியும், சுவரை கரும்பலகையாக மாற்றியும்தான் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் பள்ளி சுற்று சுவருக்கு அருகில் தகர சீட் போட்ட வகுப்பறையில் பயின்று வருகின்றனர்
இங்கு, முற்றிலும் கிராமப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளே படிக்கும் நிலையில், அவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலை இன்றி பள்ளி செயல்படுவது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், பள்ளியை தரம் உயர்த்திவிட்டு, அதன்பிறகு அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது, பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியது:
இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்த நிலையில், 2018ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பெயரில் மட்டுமே பள்ளி மாறிய நிலையில், மேல்நிலைப் பள்ளி என்பதற்கு ஏற்றவாறு வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் என்று உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே இல்லை. புதியதாக வகுப்பறைகள் கட்டுவதற்கு இடமில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், இடவசதியில்லாத பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது ஏன்
பள்ளியை தரம் உயர்த்தினால் மட்டும் போதாது. அங்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும் பள்ளிக்கல்வித்துறையின் தலையாய கடமை. ஆனால், இந்த பள்ளியில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையாகவே இருந்து வருகிறது.
இதன்காரணமாக, 6 முதல் 8ம் வகுப்புக்கு வகுப்பறைகள் இல்லாமல் வராண்டாவை வகுப்பறையாக மாற்றி, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவலம்தான் நீடிக்கிறது.

இந்த நிலையை களைந்து, பள்ளியில் போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் அடிப்படை வசதிகளாக குடிநீர் மற்றும் கழிவறைகள் இங்கே இல்லை அதிலும் மாணவிகள் பயன்படுத்துவதற்கான கழிவறைகள் இல்லாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது
இனி வரும் காலங்கள் மழைக் காலங்கள் என்பதால் மாணவ மாணவிகள் கல்வி கற்பது மிகவும் கடினமான சூழ்நிலையாக மாறிவிடும்

இதன் காரணமாக பெற்றோர்கள் இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்காமல் வேறு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர் அதனால் தற்போது இங்கு மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
இதனால் உடனடியாக பள்ளியை மேம்படுத்த புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
