தலைப்பு செய்திகள்
புதுச்சேரி வரும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து திமுக சட்டமன்ற குழு சார்பில் மனு -மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., தகவல் !

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காக பொய்யான வாக்குறுதிகளை மட்டும் அளித்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்தபோது புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, ஓட்டுக்களை பெற்று கூட்டணி ஆட்சியிலும் அமர்ந்தனர். ஆனால் தேர்தல் முடிந்தும், புதுச்சேரியில் ஆட்சியில் அமர்ந்தும் ஓராண்டு நிறைவடையும் நிலையிலும் கூட இதுவரை எந்த வாக்குறுதிகளையும் ஒன்றிய அரசு மூலம் பாஜக நிறைவேற்றவில்லை.
அதேசமயம் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் வாரந்தோறும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அவர்களது வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுக்க கட் அவுட், பேனர்களை அக்கட்சியினர் வைக்கின்றனர். இதனை பார்க்கும் மக்களும் ஒன்றிய அமைச்சர்கள் வருகின்றனர், தேசிய தலைவர்கள் வருகின்றனர் ஏதேனும் ஒரு நன்மை நமக்கு கிடைக்கும் என்று நப்பாசை கொள்கின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நன்மையும் புதுச்சேரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர்களாலும், பாஜக தேசிய தலைவர்களாலும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் வரும் 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மீண்டும் புதுச்சேரி மக்கள் அனைவரிடமும் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகின்றது. அதனால் இவர் அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்புகளும் உள்ளது. எனவே சட்டசபை தேர்தலின்போதும், அதன்பிறகும் பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றச் செய்யும் வகையில் அனுமதி பெற்று, திமுக புதுச்சேரி சட்டமன்ற குழு சார்பில் புதுச்சேரி வரவுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
