மாவட்ட செய்திகள்
பிரபல ஹோட்டல் பொங்கலில் கரப்பான்பூச்சி! கண்டுக்கொள்ளாத சுகாதாரத்துறை! உயிரோடு விளையாடும் உணவகங்கள்!

தமிழகம் முழுக்கவே ஒரு மாவட்டம் மிச்சம் வைக்காமல், பெரும்பாலான ஹோட்டல்களில் அது சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும் பொதுமக்களின் உடல்நலனைப் பற்றி கவலைப்படுவதேயில்லை. ரோட்டில் கடை பரப்பி அஜினோமோட்டோவை அள்ளிக் கொட்டி, சமைக்கிற பாஸ்ட்-புட் கடைகளாக இருந்தாலும் சரி, ஜி.எஸ்.டி., வசூலித்து ஏஸி அறைகளில் ஒரு கரண்டி பொங்கலுக்கு நூற்றுக்கணக்கில் பில் போடுகின்றன ஹை-டெக் சுத்த சைவ உணவக வகையறாக்களாக இருந்தாலும் சரி. அவ்வப்போது கெட்டுப் போன உணவு பொருட்களும், கரப்பான்பூச்சி விழுந்து கிடக்கிற திண்பண்டங்களுமாக செய்திகள் பரவி கொண்டு தான் இருக்கின்றன. அப்படி கடலூரில் செயல்பட்டு வரும் பிரபலமான ஓட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட பொங்கலில் கரப்பான் பூச்சி இருந்திருக்கிறது. இதனை பார்சல் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் தவறை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி பலியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஷவர்மா சாப்பிட்டு தஞ்சையைச் சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஷவர்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை அறிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள். வாடிக்கையாளர்களும் உஷாராகி உணவுப் பொருட்களை தரமாக உள்ளதா என்ற சோதித்த பின்னரே சாப்பிட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் கடலூரில் நடைபெற்றுள்ளது.

சேஷாத்திரி என்பவர் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு கடலூரில் செயல்பட்டு வரும் ஒரு பிரபலமான ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பொங்கலை பார்சலாக வாங்கிக் கொண்டு வீட்டில் வந்து திறந்து பார்த்த போது அவருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. பொங்கல் பார்சலில் பொங்கலோடு ஒன்றோடு ஒன்றாக இணைந்து இறந்துபோன கரப்பான் பூச்சி ஒன்று மெத்தையில் படுத்து உறங்குவதுபோல கிடந்தது.
இதனால் அதிர்ந்து போன சேஷாத்திரி விரைந்து சென்று ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டார். ஆனால் அவர்கள் உரிய பதில் சொல்லாத காரணத்தால் இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் உலவ விடட்டார். இதனை பார்த்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, பொங்கலில் கரப்பான் பூச்சி இருந்தது உண்மைதான். இதற்கு காரணம் தங்கள் ஓட்டல் ஊழியர்கள் தான் என்பதை ஓட்டல் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இதைத்தொடர்ந்து ஓட்டல் முழுவதையும் புரட்டிப்போட்டு உணவுத்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். அதில் ஓட்டலில் ஒரு சில இடங்கள் சுகாதாரமற்று காணப்பட்டதை கண்டு, உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
தவறு குறித்து வாடிக்கையாளர்கள் சொல்லும் புகார்களை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல் ஊழியர்களிடம் அறிவுறுத்தினர்.

இனிமேல் இதுபோன்ற சுகாதார தவறுகள் நடக்காமல் நடந்து கொள்வோம். தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஓட்டல் நிர்வாகமும், ஊழியர்களும் கூறினர்.
இதற்கு முன்னர் திருப்பூரில் செயல்பட்டு வரும் மயூரா என்ற ஓட்டலில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டலில் இருந்த பல்வேறு உணவுகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பகுப்பாய்வின் முடிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
உயிரை காக்கும் உணவுப்பொருட்கள் சுகாதாரமின்றி, அலட்சியமாக தயாரிக்கப்படும் போது அது உயிரையே பலிவாங்கிவிடுகிறது. இதனை புரிந்து கொண்டு உணவை தயாரிப்பவர்கள் சற்று கவனத்துடன் நடந்து கொண்டால் இதுபோன்ற அசம்பாவிதங்களையும், நடவடிக்கைகளையும் தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
