டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற மூதாட்டி உயிருடன் இருக்கும் போதே இறந்து போனதாக அரக்கோணம் நகராட்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்த போலி சான்றிதழ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிறப்பு சான்றிதழும் போலியாக வழங்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தைச் சேர்ந்த ஜெஸ்வந்த் என்பவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கடந்த 2022ம் ஆண்டு மே 21ம் தேதி பிறந்தது போன்று அரக்கோணம் அரசு மருத்துவமனை பிறப்பு இறப்பு பதிவாளர் சத்யராஜ் சான்று வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் அரக்கோணம் நகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கியது போன்று சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட தேதியில் சீரியல் எண் 187-ல் வேறு ஒரு நபர் பிறந்துள்ளார் . ஆனால் ஒரே சீரியல் எண்ணை குறிப்பிட்டு அன்றைய தினம் ஜெஸ்வந்த் என்பவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிறக்காத நிலையில் அவர் பிறந்தது போன்று போலியான சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்த சான்றிதழில் அரக்கோணம் நகராட்சி என்பதை குறிக்கும் வகையிலான ஏஎம்சி என்ற சீல் மட்டுமே இல்லை . மீதி அனைத்தும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போலி சான்றிதழ் குறித்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் சத்யராஜ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஏற்கனவே மூதாட்டி ஒருவர் உயிரோடு இருக்கும்போதே இறந்து போனதாக சான்றிதழ் போலியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் கம்ப்யூட்டர் மையத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே போலி சான்றிதழ் தயாரிக்கும் கம்ப்யூட்டர் மைய ( நெட் சென்டர்) உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரக்கோணம் டவுன் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் இதுபோன்ற போலி சான்றிதழ்கள் வழங்குவதை கண்டறிய முடியும். ஆனால் போலீசார் எதையும் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற போலி சான்றிதழ்கள் எப்படி வருகிறது என்பது மர்மமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மனம் குமுறுகின்றனர்.
அதே நேரம் மாவட்ட நிர்வாகம் அரக்கோணம் நகராட்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் கள ஆய்வு நடத்தி போலி சான்றிதழ்கள் உலா வருவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
