BREAKING NEWS

செய்யாறில் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு  குப்பைகள் தரம் பிரித்தெடுப்பது குறித்த செயல் விளக்கம் !

செய்யாறில் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு   குப்பைகள் தரம் பிரித்தெடுப்பது குறித்த செயல் விளக்கம் !

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் நான்கு வகை குப்பைகளை பிரித்து எடுக்கும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் முறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட திருவத்திபுரம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக வீதிகளில் இருந்து தினசரி 30 டன் குப்பைகள் சேகரமாகிறது.‌ இவைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் உள்ளிட்ட நான்கு வகை குப்பைகள் வீடுகளில் இருந்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கின்றனர். இந்த குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில்லை என, தொடர்ந்து புகார்களும் எழுந்து வருகின்றன.

இதனால், குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கான போதிய இடமும் நகராட்சி நிர்வாகத்திடம் இல்லை என்பது தான் உண்மை. ஒரு நாளைக்கு 100 கிலோ குப்பைகள் மட்டும் நகராட்சி வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு தரம் பிரித்தெடுத்து உரமாக நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மாற்றுகின்றனர். இந்தப் பணி எப்படி நடக்கிறது ?என்று பள்ளி மாணவர்கள் சிறு வயதிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வப்போது செயல்முறை விளக்கமும் நடத்தப்படுகின்றன.

செய்யாறில் உள்ள கலைமகள் வித்யா மந்திர் பிரைமரி பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து எடுப்பதால் என்ன பயன்? குப்பைகள் தரம் பிரிக்காமல் குவியலாக கொட்டி வைத்திருந்தால் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைகிறது, சுற்றுச்சூழல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது குறித்து நகராட்சி கமிஷனர் ஆண்ட்ரூஸ், துப்புரவு ஆய்வாளர் மதனராசன், கலைமகள் வித்யா மந்திர் பிரைமரி பள்ளியின் தாளாளர் சத்யா மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் செயல் விளக்கமாக பள்ளி மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர். இந்த செயல் விளக்கம் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS