மாவட்ட செய்திகள்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 20) தொடங்கிவைத்தார். வேலை வாய்ப்பைப் பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அவர், கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான ஒளிபரப்பையும் தொடங்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்புடன் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. மகளிர் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.
முந்தைய முகாம்கள்
2021 மே மாதம் முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் 5,708 நிறுவனங்களும், 2,50,516 வேலைதேடுநர்களும் பங்கேற்றனர். அவர்களில் 517 மாற்றுத்திறனாளிகள் உட்பட 41,213 பேர் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
73,950 காலிப் பணியிடங்கள்
இந்நிலையில், இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்நிறுவனங்களில் 73,950 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் 20 பேருக்கான பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

போட்டித்தேர்வுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி
விழா மேடையில், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக, அரசுப் பணிகளுக்காகப் பல்வேறு முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிக்கான ஒளிபரப்பையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
இந்தப் பயிற்சி வகுப்பு, கல்வித் தொலைக்காட்சி சேனலில் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
