உடுமலை முதற்கிளை / மாதிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் அவர்களுடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்வு நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் க. லெனின்பாரதி அவர்கள் தலைமை வகித்தார்.
நூலகர் அ.பீர்பாஷா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் எம்.தண்டபாணி, பி.வேலாயுதம், வி. கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே.விஜயகுமார், கு.கண்ணபிரான், ஆர்.எஸ்.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் அவர்களுக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு செய்யப்பட்டது. பின்னர் , போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது..
கலந்துரையாடலில் தேர்வர்களின் கேள்விகளுக்கு விடையளித்து பேசினார்.

அவர் பேசியதாவது,
“யு.பி.எஸ்.சி என்பது கடினமான தேர்வாகும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும். எனவே இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்கள் திறன்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது முக்கியமானது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும். அதை அடைவதற்கு மட்டுமே ஆற்றலை செலவழிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேறு எந்த கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
மனம் தளராமல் வெற்றி பெறுவோம் என்ற நல்ல சிந்தனையுடன் முயலவேண்டும். தேர்வில் எந்த மாதிரியான கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபடும் என சுயமாக புரிந்துவைத்துகொள்ளுதல் தான் வெற்றிக்கு வழி வகுக்கும். இணையம் வளர்ந்து வரும் நிலையில் நகரம் கிராமம் என்ற வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது, ஆகவே இணையம் வாயிலாக கற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திட வேண்டும்.

ஐ. ஏ. எஸ், தேர்வுக்கான பாடதிட்டம் பெரியது, அதை புரிந்து படிக்கவேண்டும். பயிற்சி மையத்தில் பணியிலிருக்கும் அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றது மிகவும் உதவியாக இருந்தது. முயற்சி செய்தால் வெற்றி எல்லோர்க்கும் சாத்தியம் என்று பொத்தாம்பொதுவாக எண்ணிவிடாமல் புரிந்து படித்தல், குழுவாகப் படித்தல், தோல்விகள் குறித்து வருந்தாமல் ஏற்றுக்கொள்ளுதல், தொடர்முயற்சி, ஆகியவைகளும் அரசின் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திகொண்டதும் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.
தேர்வுக்கு தயாராகும் பணியில் ஈடுபடும்போது நிறைய பேர் தங்களை தயார்படுத்திக்கொள்ள தவறிவிடுகிறார்கள். உங்களின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி போன்றவற்றை சோதிக்கும் ஒன்றாகவும் இந்த தேர்வு அமையும். இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும். தேர்வில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்வதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ” என்று பேசினார்.
நிகழ்வின் முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் எஸ். சண்முகசுந்தரம் அவர்கள் நன்றி கூறினார்.
