தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் தனியார் கல்குவாரியானது அரசு அனுமதி வழங்கிய அளவினை தாண்டி 320 அடி வரை தோண்டி எடுத்து வருவதாகவும், மேலும் போர்வெல் மூலம் 100 அடி வரை குழிபறித்து வருவதாகவும் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கற்களை வெடிக்கச் செய்யும் பொழுது வீடுகள் அனைத்தும் குலுங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பூலாங்குளம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருவதாகவும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தனியார் கல்குவாரியானது அரசு அனுமதி வழங்கிய அளவினை தாண்டி 320 அடி வரை தோண்டி எடுத்து வருவதாகவும், மேலும் போர்வெல் மூலம் 100 அடி வரை குழிபறித்து வருவதாகவும் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கற்களை வெடிக்கச் செய்யும் பொழுது வீடுகள் அனைத்தும் குலுங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது பள்ளியின் கட்டிடங்கள் அதிகளவில் குலுங்குவதால் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர். பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் ஆண்டிபட்டி கிராமம் முழுவதும் குவாரியில் இருந்து கரும்புகைகள் சூழ்வதாகவும் இதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
எனவே இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு ஆண்டிபட்டி அருகே சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுவரும் கல்குவாரி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஆண்டிபட்டி மற்றும் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மனு அளித்தனர்.
