ரூ. 4 கோடியே 54 லட்சம் மதீப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காட்டுச்சேரி கிராமத்தில் கடந்த 2000 -2001 ஆம் ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 100 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது பழுதடைந்த நிலையில் அவற்றிற்குப் பதில் புதிய வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி 95 புதிய வீடுகள் கட்டுவதற்கும், 5 வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்கும், சாலைகள் அமைப்பதற்கும், பள்ளி மற்றும் சமுதாயம் கூடங்களை சீரமைப்பதற்கு அரசு ரூ .4 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ததை அடுத்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து விழாவில் ரேஷன் அரிசி தரமற்று வழங்கப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பழுதடைந்த வீடுகள் கட்டித் தரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக அப்பகுதியில் உள்ள அங்காடியில் இருந்து ரேஷன் அரிசி எடுத்துவரப்பட்டு அதனை பார்வையிட்ட ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அமுதா தரமான ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் கலைஞர் ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் பாராட்டி இதுபோன்று மற்ற மாநிலங்களிலும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அனைத்து திட்டங்களையும் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி தரும் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அதை பின்பற்றித்தான் இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டம் தற்போதைய பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டம் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் இந்தியா முழுவதும் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. ஜாதி கலவரங்களை தடுக்கும் நோக்கில் கலைஞரால் சமத்துவபுரம் திட்டம் உருவாக்கப்பட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. சொன்னதை செய்பவர், சொல்லாததையும் செய்பவர் யார் என்று கேட்டால் கலைஞர் என்று சிறுவர்களுக்கு கூட தெரியும் அந்த வகையில் கலைஞரை பின்பற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.

பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் அனைவருக்கும் படிப்படியாக கட்டி தரப்படும் என்றார்.
விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி மற்றும் மயிலாடுதுறை எம்பி. ராமலிங்கம், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, மகேந்திரன், கமல ஜோதி தேவேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காழியப்பநல்லூர், தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற. திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறன் மேம்பாடு செய்தல் நிகழ்வில் கலந்துகொண்டார். தொடர்ந்து அமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யதார்.
