‘மாணவி மரணத்துக்கு சிபிசிஐடி விசாரணை வேண்டும்’ – பள்ளி முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம்;போலீஸார் தடியடி.

சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் கல்வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17) சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றபோது மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
