தேனியில் காந்தி சிலை அருகே தி.க., திமுகவினர் பெரியார் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது.

தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக,
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலை அருகே பெரியாரின் உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த இருந்தனர்.
இந்த நிகழ்வில் தி.க மட்டுமின்றி திமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஆனால் மகாத்மா காந்தியின் சிலை அருகே பெரியாரின் உருவப்படம் வைத்து பிறந்த நாள் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காந்தி சிலை அமைந்துள்ள இடமானது, கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அந்த இடத்தில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது எனக் கூறி கோசங்களை எழுப்பினர்.
அதற்கு அங்கிருந்த தி.க., திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியதால், அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பாஜகவினர் ஏற்க மறுத்து பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் எனக் கூறி கோசங்களை ஈடுபட்டனர். இதன் காரணமாக அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து பெரியாரின் உருவப்படத்திற்கு தி.க., தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
