BREAKING NEWS

கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது! 

கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது! 

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே மது போதையில் இருந்த நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கபந்து. இவரது மகன் சந்தோஷ் (23). இவர் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இதே காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார் ஓட்டுநர் சக்திகுமார் (26), பைனான்சியர் அஜய் (23). இவர்கள் மூவரும் நண்பர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்த பிறகு மூவரும் ஒன்றாக சேர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் சந்தோஷ் மீது சக்திகுமாருக்கும் அஜய்க்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெளிவாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவரை திட்டமிட்டு தீர்த்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு மது அருந்துவதற்காக சக்தி குமாரும், அஜயும் சேர்ந்து சந்தோஷை நைசாக பேசி அழகு சேனை டாஸ்மாக் மதுபான கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மதுபாட்டில் வாங்கிக் கொண்டு அருகில் இருந்த காலி மனையில் உட்கார்ந்து மூவரும் மது அருந்தியுள்ளனர்.

அப்பொழுது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணம் ஏன்டா பொண்ணுக்காக மருந்து குடிக்கிறாய் என்று கேட்டபோது சந்தோஷ் அதைப்பற்றி நீ பேசாதடா என்று சொன்னபோது மீண்டும் மீண்டும் அதையே கேட்டபோது ஆபாசமான அறுவெறுருக்கத்தக்க வார்த்தைகளால் சந்தோஷை சக்தி குமார் மற்றும் அஜய் ஆகியோர் திட்டி வாக்குவாதம் செய்து சண்டையை மேலும் வலுக்கச் செய்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அஜய் என் பங்காளியை அசிங்கமாக பேசுகிறாயே என அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சந்தோஷின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்தார் சந்தோஷ். உடனடியாக அவருக்கு மூச்சுப் பேச்சு இல்லாததை பார்த்துவிட்டு அவரை அங்கேயே விட்டுவிட்டு சக்திகுமாரும், அஜயும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் 18 ஆம் தேதி காலை அதாவது மறுநாள் வந்து அதே இடத்தில் பார்த்துள்ளனர். அவர் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்துள்ளார் சந்தோஷ். இதற்குப் பிறகு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சந்தோஷை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சக்திகுமார் அழைத்துச் சென்று சேர்த்துள்ளார் .

விபத்து என தகவல் தெரிவித்துள்ளார் சக்தி குமார். இப்படி குடிபோதையில் சந்தோஷை தாக்கி விட்டு சக்தி குமாரும், அஜயும் ஏதோ விபத்தில் சந்தோஷ் சிக்கி படுகாயம் அடைந்ததாக முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி நாடகம் ஆடினர். தாங்கள்தான் தாக்கினோம் என்பதை அப்பொழுது இவர்கள் வெளியில் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து சிகிச்சையில் இருந்த சந்தோஷ் திடீரென 19 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது .இதைதொடர்ந்து கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்.

இதையடுத்து சக்திகுமார் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்து கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் அஜய் மற்றும் சக்திகுமார் ஆகிய இருவரும் காவல் ஆய்வாளர் மகாலட்சுமியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதில் தாங்கள் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டு இருப்பதற்கு முன்பாக சந்தோஷ், அவரது சித்தப்பா ராஜா என்பவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு சக்திகுமார் மற்றும் அஜய் ஆகிய இருவரும் சேர்ந்து பிரதாப் என்பவரை தீர்த்துகட்ட போவதாக சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இதை நினைவில் வைத்துக் கொண்டும், இந்த முன் பகையை தீர்த்துக் கொள்ளவும் சந்தோஷை தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது வாக்குவாதம் வலுக்கவே நீ ஏன் பெண்ணுக்காக மருந்து சாப்பிட்டாய் என்று சக்தி குமார் கேட்க, சந்தோஷ் பதிலுக்கு உன் மனைவி சரியில்லை என்று சொல்ல வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து அஜய் சந்தோஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் மயங்கி விழுந்தவரை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை வந்து சக்திகுமார் ஆம்புலன்ஸை வரவழைத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். இப்படி நாடகமாடியதை அவர்களாகவே இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதை யடுத்து இருவரையும் கைது செய்த கண்ணமங்கலம் போலீசார் வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் அஜய் மற்றும் சக்திகுமார் ஆகிய இருவரையும் காவலில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் முன்விரோதம் காரணமாகவே திட்டமிட்டு சந்தோஷ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது.

இதையடுத்து துரிதமாக விரைந்து செயல்பட்டு கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமிக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் மு.ராஜா

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன் 

CATEGORIES
TAGS