BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது.

திருநெல்வேலி மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.80 மிமீ. தற்பொழுது ஜூலை 27ம் தேதி வரை 250.89 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இம்மாதம் வரை பெறக்கூடிய இயல்பான மழையளவான 275.5-ஐ விட 9% குறைவாக பெறப்பட்டுள்ளது. தற்போது நமது மாவட்டத்தில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 29.30% நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 48.21% நீர் இருப்பு இருந்தது.

 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 6709 எக்டர் பரப்பளவிலும், சிறு தானியங்கள் 137 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1219 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 585 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 15 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 80 எக்டர் பரப்பளவிலும், ஆக மொத்தம் 8745 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கார் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான இரசாயன உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் கிடைத்திட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உயிர் உரங்களான அசோஸ்ஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

 

மாவட்டம் முழுவதும் உள்ள விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையாளர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் தரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மாநில அரசின் முதன்மை திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது மே 23 அன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 1997 கிராம பஞ்சாயத்துகளில் காணொலி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டது.

 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டிற்கான 35 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 5933 பண்ணைக் குடும்பங்களுக்கு குடும்பத்துக்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது. வம்பன் 8 உளுந்து விதைகள் எக்டருக்கு 5 கிலோ வீதம் 525 எக்டர் பரப்பிற்கு 525 விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இக்கிராம பஞ்சாயத்துகளுக்கு கிராமம் ஒன்றுக்கு 5 கைத்தெளிப்பான்கள் வீதம் 175 கைத்தெளிப்பான்களும் 225 மின்கலத் தெளிப்பான்களும் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

 

வேளாண் பொறியியல் துறை மூலம் 5 தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது, மண் மற்றும் பாசனநீர் ஆய்வு செய்யப்பட்டு தோட்டக்கலை துறையின் மூலமாக அத்தரிசு நிலத் தொகுப்புகளில் சாகுபடி செய்வதற்கான பயிர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நில தொகுப்பினை சாகுபடிக்கு கொண்டுவருவதற்கு உழவன் செயலி மூலம் தாங்களாகவே பதிவு செய்திட வசதி செய்துதரப்பட்டுள்ளது. தகுதி உடைய விவசாயிகள் இச்செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள ”தங்கப்பயறு திட்டம் ”செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் 100 ஹெக்டேர் பரப்பளவில் சோயா பீன்ஸ் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 6.5 மெ.டன் சோயா பீன்ஸ் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுளளது. விவசாயப் பெருமக்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேவையான விதைகளைப் பெற்று இத்திட்டமானது சிறப்புற செயல்படுத்திட ஒத்துழைப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேற்காணும் விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு இம்மாதம் வரை 407 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் 391 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 4 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 10.6 மெ.டன். கண்டறியப்பட்டு விற்பனைத்தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ29.87 லட்சம் ஆகும். என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்கள்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) டேவிட் டென்னிசன், விதை ஆய்வு துணை இயக்குநர் ஆர்.ராஜ்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் பாலகிருஷ்ணன், சுந்தர் டேவிட் பாலஸ் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )