36 சவரன் நகை கொள்ளை… காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு சொகுசு கார் & புது நகைகள் வாங்கி குவித்த தம்பதியர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் நடந்த ஒரு சினிமாத்தனமான கொள்ளை சம்பவமும், அதில் தொடர்புடைய பலே திருடன் தன் மனைவியுடன் சிக்கிய அதிர்ச்சி பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா – ரவிக்குமார் தம்பதியினர், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மர்ம நபர்கள், பிற்பகல் 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 36 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் களத்தில் இறங்கிய காட்பாடி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காட்பாடி டெல் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு சொகுசு கார் சுற்றித் திரிவதைக் கண்டு, காரில் இருந்த தம்பதியைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காரில் இருந்தது விருதுநகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி முத்துவேல் கார்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி என்பது தெரியவந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மேலும் முத்துவேல் கார்த்திக் மீது விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி என பல்வேறு மாவட்டங்களில் 9-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிய வந்தது.
உள்ளூரில் திருடினால் காவல் துறையிடம் சிக்கி கொள்வோம் என்பதால், பிற ஊர்களில் தங்களை “ஐடி ஊழியர்கள்” என்று பொய் கூறி வீடு எடுத்து தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை அரக்கோணம், திருத்தணி பகுதிகளில் அடகு வைத்தும், பழைய நகைகளை மாற்றியும் தன் காதல் மனைவிக்கு புதிய நகைகளை வாங்கித் தந்துள்ளார். மேலும் நகையை விற்ற பணத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சொகுசு கார் ஒன்றை வாங்கி, மனைவி மற்றும் தங்களது இரண்டு ஆண் குழந்தைகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.
தற்போது கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 26 சவரன் நகைகளை மீட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மீதமுள்ள நகைகளை மீட்க அவர்களைக் காவல் வழக்கில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர் போலீசார்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட்டில் ஈடுபட்டு கணவன் மனைவி சிறைக்குச் சென்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
