தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலான குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வழங்கல்

தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏதுவாக ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை நேற்று தூய்மை காவலர்களிடம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 47 ஆயிரம் வீடுகள் உள்ளன. நாள்தோறும் சுமார் 50 மெட்ரிக் டன் குப்பைகள் வீடுகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்களிலிருந்து வெளியேறுகிறது. இந்த குப்பைகளை சேகரிக்க ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்து அதனை மாநகராட்சி தூய்மைக் காவலர்கள் மூலம் சேகரித்து குப்பை கிடங்கில் இருப்பு வைத்து தரம் பிரிக்கப்படுகிறது.
மேலும், வீடுகளில் உள்ள குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை தூய்மைக் காவலர்கள் தினந்தோறும் சென்று பொதுமக்களிடம் வாங்கும் வகையில் அதற்கேற்றவாறு குப்பைத் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் “குப்பையில்லா தஞ்சை, குற்றமில்லா நகரம்” என்ற கொள்கையின்படி, தஞ்சாவூர் மாநகராட்சியின் 15-வது நிதிக்குழுவின் கீழ் ரூ.2.67கோடி மதிப்பீட்டில் 312 பெரிய அளவிலான வாகனங்களில் ஏற்றிச் செல்லும் வகையில் இரும்பு குப்பைத் தொட்டிகளும், 207 சிறிய அளவிலான பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளும் கொள்முதல் செய்யப்பட்டன.
இந்த குப்பைத் தொட்டிகளை நேற்று பயன்பாட்டுக்காக தூய்மைக் காவலர்களிடம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக்குமார், மண்டலத் தலைவர் மேத்தா, மாநகராட்சி பொறியாளர்கள் கார்த்தி, ஜி.அறச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
