BREAKING NEWS

தஞ்சை மாநகராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்த ரூ.1100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் மேயர் சண். ராமநாதன் பேட்டி

தஞ்சை மாநகராட்சியில்  சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்த  ரூ.1100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார்  மேயர் சண். ராமநாதன் பேட்டி

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேற்று தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாநகராட்சியில் நம்ம வார்டு நம்ம மேயர் திட்டத்தின் கீழ் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து வந்தேன். அந்த திட்டம் முடிவு அடைந்தது. இந்தத் திட்ட மூலம் தினமும் ஆய்வு செய்ததில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களோடு மக்களாக நின்று ஆய்வு செய்து வந்தேன். அப்படி ஆய்வு செய்ததில் வார்டுகளில் வசதிகள் மேம்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தாயம்படி முதல் டிவிசனுக்கு ரூ.127 கோடி, இரண்டாம் டிவிசனுக்கு ரூ.155.44 கோடி, 3-ம் டிவிசனுக்கு ரூ.460.4 கோடி, 4-ம் டிவிசனுக்கு ரூ.211.41 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதில் சாலை வசதி மேம்படுத்துதல், பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் இடம் பெறும். இந்த திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2-வது போர்வெல் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.‌ இந்த திட்டம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு செயல்பட்டு வந்துவிடும். 3-வது போர்வெல் அமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு தஞ்சை மாநகரில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை, தட்டுப்பாடு இருக்காது. 24 மணி நேரமும் தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு விடும்.
தஞ்சை மாநகரில் சாலைகளில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணக்கம் தஞ்சை என்ற மொபைல் செயலி விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதன் பிறகு பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே இந்த மொபைல் செயலின் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம். இன்னும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மாநகரில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், அரச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )