29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

செங்கோட்டையில் 29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நேற்று விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகரின் முக்கிய இடங்களில் சுமார் 34க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக இன்று வழிபாடு செய்யப்பட்ட அனைத்து விநாயகா் சிலைகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குண்டாற்றில் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் செங்கோட்டை வண்டிமலச்சி அம்மன் கோவில் முன்பு உள்ள ஓம் காளி திடலில் வைத்து நடந்த விஜர்சன ஊர்வல துவக்க நிகழ்ச்சிக்கு விழாகமிட்டித் தலைவா் மணிகண்டன் தலைமை தாங்கினார்.கமிட்டி ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், கமிட்டி இணைச்செயலாளா் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்
அகில பாரத சன்னியாசிகள் சங்க மாநில இணைச்செயலாளா் சுவாமிராகவானந்தா, விஷ்வஹிந்த் பரிஷத் மாநிலத்தலைவர் கதிர்வேலு, முன்னாள் எம்.பி சசிகலாபுஷ்பா, இந்து முன்னனி மாநிலத் துணைத்தலைவா் வீபி.ஜெயக்குமார், விஷ்வஹிந்த் பரிஷத் திருக்கோவில் திருமடங்கள் தென்பாரத அமைப்பாளா் சரவணகார்த்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் டாக்டா் எல்.முருகன் கலந்து கொண்டு விநாயகா் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னா் விநாயகர் சிலை ஊர்வலமானது வண்டிமலச்சியம்மன் கோவில் முன்பிலிருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் ரோடு, மேலுார், கீழபஜார் வழியாக வந்து குண்டாற்றில் விநாயகா் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.
விநாயகா் ஊர்வலத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பானா் கிருஷ்ணராஜ் தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு செங்கோட்டை நகரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் மதிய விடுமுறை விடப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டது. நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
