தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.

தென்காசி அருகே உள்ள பாட்டா குறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அந்த குவாரியில் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைப்பிடிக்காததே அவர் உயிரிழந்ததற்கு காரணம் என்று தெரிய வருகிறது.
விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு முதல் காரணங்களாக அமைந்துள்ளன .
மேலும் அங்கே விதிகளை மீறி அதிக அளவு ஆழத்தில் துளையிட்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வெடித்ததால் தான் நில அதிர்வு ஏற்பட்டு உயரமான பகுதியில் இருந்து பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மதிக்காமல் சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்ததே விபத்திற்கு முக்கிய காரணம் என்று தெரிய வருகிறது.
ஆனால் தென்காசி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை பார்க்காமலேயே இது சாதாரண விபத்து என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நான்கு உயிர்களை பலி கொடுத்த பின்னரும் குவாரிகள் விஷயத்தில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் குவாரிகளின் விதிமீறல் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரைப்படி சுமார் 300 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் தென்காசி மாவட்டத்தில் இவ்வாறு குவாரிகளை ஆய்வு செய்ய குழு எதுவும் அமைக்கப்படவில்லை. பலமுறை நான் இதுகுறித்து வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
தென்காசி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொள்ளை போய் கொண்டிருப்பதை தடுக்காத அதிகாரிகள் குவாரிகளை ஆய்வு செய்யவும் தயாராக இல்லைஎன்பது இந்த விபத்தின் மூலம் தெளிவாகிறது.
இப்போது நாம் பயந்தபடியே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை தற்செயல் விபத்து மரணம் என்ற 174 வது பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது.
விபத்திற்கு காரணமான குவாரி உரிமையாளர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
எனவே விபத்திற்கு முழு காரணமான குவாரி உரிமையாளர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத அந்த குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து குவாரி இயங்குவதை தடை செய்ய வேண்டும்.
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் குவாரியில் வெளி மாவட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவை கொண்டு ஆய்வு மேற்கொண்டது போல் இந்த குவாரியிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் பலியான பரமசிவம் என்பவரின் குடும்பத்திற்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஒரு குறிப்பிட்ட தொகை உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் வழக்கு நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
எனவே பலியானவரின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன் தொழிலாளர் நலச் சட்டப்படி அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை குவாரி உரிமையாளரிடமிருந்து (குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் )பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அவல நிலை மீண்டும் தொடராமல் இருக்க விபத்து நடந்த குவாரியில் கனிமவளத்துறை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஒளிவு மறைவற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகள் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று அம்பை சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
