திண்டுக்கல்- சிறு பான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(16.09.2022) சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா, சிறுபான்மையினர் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், உலமாக்கள் நலவாரியம், கிறிஸ்தவ மகளிர் நலச்சங்கம், முஸ்லீம் மகளிர் நலச்சங்கம் ஆகியவை மூலம் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் மற்றும் டாம்கோ கடனுதவிகள், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை வழங்குதல்,
தையல் இயந்திரங்கள் வழங்குதல், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் மானிய உதவிகள் உட்பட பல்வேறு சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது.

தமிழகத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், வங்கிக் கடனுதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மகளிர் நலச்சங்கங்கள் மகளிர்களை குழு அமைத்து செயல்பட ஊக்கப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் அவர்களுக்காக அதிக கடனுதவிகள் பெற முடியும். டாம்கோ கடனுதவிகளை தனிநபர்களுக்கு அதிகளவில் வழங்கிட வேண்டும். பொருளாதார சூழ்நிலையில் கடனுதவி கேட்டு வருவோரிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவது போல் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை சிறுபான்மையினருக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
டாம்கோ கடனுதவி திட்டங்கள் குறித்து சிறுபான்மையினருக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுபான்மையினருக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சிறுபான்மையினருக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குமரன் திருநகர் குழந்தைகள் மையம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மரியநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம், நாகல் நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சந்தை ஆகியவற்றை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் நலச்சங்கங்கள் சார்பில் கடன் பெற்று தையல் தொழில்,
மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் தையல் பயிற்சி ஆகிய தொழில்களை மேற்கொண்டு வரும் மகளிர்களை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தற்போதைய நிலை மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்.
மா.மூ.கோவிலுார் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று பால் பண்ணை நடத்தி வரும் சம்பங்கி மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
பால் தொழிலில் நெய், பால்கோவா போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆலோசனையும் வழங்கினார்.
பின்னர் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பல்நோக்கு சமூக பணி மையத்தில் பெண்களுக்கு தையல் பயற்சி, அழகுக்கலைப் பயிற்சி, கணினி பயிற்சி, கால் மிதியடி தயாரித்தல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி மையங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வு மற்றும் ஆய்வில், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன்,
திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன்,
மாநகராட்சி செயற் பொறியாளர் நாராயணன், மாநகர் நல அலுவலர் இந்திரா, திண்டுக்கல் (கிழக்கு) வட்டாட்சியர் சந்தனமேரி கீதா, முஸ்லீம் மகளிர் நலச்சங்கத் தலைவர் டாக்டர் பீர்முகம்மது,
கிறிஸ்தவ மகளிர் நலச்சங்கத் தலைவர் ஆல்பர்ட் பெர்னான்டோ, உறுப்பினர்கள் , அலுவலகப் பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
