லஞ்சம் வாங்கிய காட்பாடி பள்ளிக்குப்பம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் கைது!

லஞ்சம் வாங்கிய காட்பாடி பள்ளிக் குப்பம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் வெங்கடலட்சுமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அக்கிரெட்டிபுதூரைச் சேர்ந்தவர் ரங்கன். இவர் தனது 3 குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்டு காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வெங்கடலட்சுமியை சந்தித்து தனது குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்டார். அதற்கு வெங்கடலட்சுமி ஒரு குழந்தைக்கு தலா ரூ. 300 வீதம் 3 குழந்தைகளுக்கும் ரூபாய் 900 தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். ஆனால் இந்த பணத்தை கொடுக்க விருப்பமில்லாத ரங்கன் நேரடியாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மருத்துவர் வெங்கடலட்சுமி லஞ்சம் கேட்பது குறித்து தகவல் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த ரூபாய் 900 ஐ ரசாயனம் தடவிய நிலையில் கொண்டு வந்து அரசு மருத்துவர் வெங்கடலட்சுமியிடம் ஒப்படைத்தார். அப்போது அந்த பணத்தை அவர் வாங்கி தனது பையில் வைத்துக்கொண்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து மருத்துவர் வெங்கடலட்சுமியை கையும் களவுமாக கைது செய்து அவரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் தொரப்பாடி அரசு மகளிர் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
