வேலூர் ஆட்சியரகம் – பிரம்மாஸ் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியரக காயிதே மில்லத் அரங்கில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்வுநாள் கூட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த 22.06.2026 (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தும் 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, காவல்துறையின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்லும் நோக்கில் பொதுமக்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மாலை சுமார் 5.10 மணியளவில் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள பிரம்மாஸ் பள்ளியின் நிறுவனர் செந்தில் மற்றும் அவருடன் சிலர், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வேகமாக காரில் வந்து, ஆர்ப்பாட்ட மேடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதம் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், மாநில நிர்வாகிகள் ஆலோசித்து, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மாலை 5.25 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆர்ப்பாட்டத்தின் 5வது கோரிக்கையாக, குடியாத்தம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகள், குறிப்பாக பிரம்மாஸ் பள்ளியில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும், அதே நேரத்தில் பள்ளி நிறுவனர் போராட்ட இடத்திற்கு வந்தது பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பிரம்மாஸ் பள்ளி தொடர்பாக ஏற்கனவே தமிழக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக நல உணர்வுமிகு பொதுமக்களால் 10 நாட்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 22.06.2026 அன்று மாலை 6.30 மணியளவில் குடியாத்தம் நகர காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரம்மாஸ் பள்ளி மற்றும் அதன் நிர்வாகத்தை கண்டித்து, அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தேதி, காவல்துறை அனுமதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
