வேலூரில் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா : டி.எஸ்.பி., விஜிகுமார் பரிசுகள் வழங்கி சிறப்புரை!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கடலூர்–சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை வகித்தார். அவர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் தலைவி ரித்திமா ரூஹல் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, பள்ளியின் ஆண்டு விளையாட்டு அறிக்கை காணொளி வடிவில் திரையிடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) விஜிகுமார் கலந்து கொண்டார். அவருக்கு பள்ளியின் தாளாளர் தங்க பிரகாஷ் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். பின்னர், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நேரு அணிக்கு கோப்பை வழங்கிய டி.எஸ்.பி. விஜிகுமார், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக அவர் பேசியதாவது: “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையில்லாமல் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தாமல், விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களும் கைப்பேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு மட்டுமே குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம், மனவலிமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும். குழந்தைகளின் தனித்திறமையை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டில் ஈடுபடுத்துவது பெற்றோர்களின் முக்கியப் பொறுப்பாகும். மாணவர்களை திறமையான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதில் உடற்கல்வி ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவர்களின் ஒழுக்கம், பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அவர்களின் சேவையை ஒருபோதும் மறக்கக் கூடாது,” என்றார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சி விழாவில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக, பள்ளி மாணவர் தலைவர் ரோஹித் ராம் நன்றியுரையாற்ற ஆண்டு விளையாட்டு விழா நிறைவுபெற்றது.
