வேலூரில் பால் விலை உயர்த்தக் கோரி பால் கேன்களை வைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரில், பால் விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் பொன் மாணிக்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநிலத் தலைவர் ஆர். ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய பால் உற்பத்தியாளர்கள் பால் கேன்களை முன்வைத்து, பேனர்கள் மற்றும் பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆவின் நிர்வாகத்தை காக்கவும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.45, எருமைப் பாலுக்கு ரூ.60 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், சங்க நிர்வாகச் செலவுகளுக்காக விளிம்பு தொகையை ஆதார விலையில் சதவீத அடிப்படையில் 5 சதவீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், விவசாய பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்க பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தவும், ஆவினை பாதுகாக்க பால் விற்பனை விலையை ரூ.15 உயர்த்தவும், தொடக்க சங்கப் பணியாளர்களை பாதுகாக்க 5 சதவீத பணியாளர் மணிவரன் முறையை வழங்கிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பால் விலையை உயர்த்தக் கோரி பலமுறை கோரிக்கை கடிதங்கள் வழங்கியும் தமிழக வெற்றி கழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். எனவே, உடனடியாக பால் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் 24.08.2026 அன்று தமிழகம் முழுவதும் ஒருநாள் பால் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். ஏற்கனவே 1990ல் சர்வாதிகார அலெக்சாண்டர் ஆட்சியில் 2 முறையும், எம்ஜிஆர் ஆட்சியில் 2 முறையும், கலைஞர் ஆட்சியில் 7 முறையும், ஜெயலலிதா ஆட்சியில் 2 முறையும் பால் விலை உயர்த்தப்பட்டதாகவும், மேலும் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர், விவசாய புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சியில் கேட்காமலேயே அதிக விலை நிர்ணயித்து ஆதரவை தெரிவித்த ஆட்சியாக அமைந்திருந்ததாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியிலும் மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டதாகவும், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக ரூ.44 நிர்ணயித்து வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதனை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் கேன்களை முன்வைத்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஏ. பழனி, நாமக்கல் ஜி. ராஜேந்திரன், சிவகுமார் மற்றும் சங்கம் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் 24.08.2026 நடைபெற உள்ள பால் நிறுத்தப் போராட்டம் தீவிரமடையும் என சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
